Friday, July 17, 2009

தனியார் பொறியியல் கல்லூரிகளின் கட்டணக்கொள்ளை?

“தனியார் பொறியியல் கல்லூரிகளின் கட்டணக்கொள்ளை பற்றி மாநிலம் முழுவதுமிருந்து 120 புகார்கள் வந்திருக்கின்றன.

அரசு விதித்துள்ளபடி கவுன்சலிங் மூலம் சேரும் மாணவர்களிடம் 32,500 ரூபாயும், நிர்வாகப் பிரிவில் சேரும் மாணவர்களிடம் 62,500 ரூபாயும் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

ஆனால், தனியார் கல்லூரி முதலாளிகள் ரகசிய பேரம் நடத்துகின்றனர். இந்த பேரம் பத்து லட்சத்தில் தொடங்கி ஐந்து லட்சத்தில் முடிகிறது." புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. (http://rsyf.wordpress.com/2009/07/06/நீங்கள்-என்ன-சொல்கிறீர்க/ என்ற இணையத்திச் சொடுக்கவும்).


என் கருத்து.....


எந்தக் கல்லூரியில் பணம் அதிகம் வாங்கப்படுகிறதோ அந்தக் கல்லூரி நல்ல வசதிகளும் உள்ளமைப்பும் உடைத்ததாக எண்ணப்படுகிறது. ஒரே அளவு பணத்தைக்கொண்டு எப்படி சில கல்லூரிகள் சிறப்பாகவும் பல கல்லூரிகள் மோசமாகவும் இருக்கின்றன என்று பார்த்தால், சிறந்த கல்லூரிகள் கல்விக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்றுதான் கொள்ளவேண்டும். இப்படி இருக்க அரசு எப்படி நிர்வாகப் பிரிவில் சேரும் மாணவர்களிடம் கல்லூரிகள் அனைத்தும் ஒரே அளவு வசூலிக்க வேண்டும் என்று சொல்லலாம். இது அனைத்து கல்லூரிகளும் மிகவும் தாழ்ந்த கல்லூரியின் தரத்திற்கு வருவதற்குதான் வழி அமைக்கும்.

நிர்வாகப் பிரிவில் சேருவோரிடம் கல்லூரிகள் எவ்வளவு வாங்கவேண்டும் என்று நிர்ணயிக்கக்கூடாது. அந்தச் சூழலில், இரண்டு கல்லூரிகள் ஒரே அளவு நன்கொடை வாங்கினால் எந்தக் கல்லூரி சிறந்ததோ அங்குதான் மாணவர்கள் முதலில் சேருவார்கள். தரம் குறைத்த கல்லூரிகளில் ஒரு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் மொடுத்தும் மாணவர்கள் சேராத நிலையில் அக்கலூரிகள் மூடப்படும், மூடப்படவேண்டும்.

மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்லும்போது சரியான நம்பகமான டிராவல்ஸில் நாம் பயணிப்போம்; ஒரு பேருந்தில் ரூ.500 இன்னொன்றில் ரூ.300 என்று கட்டணம் வசூலித்தால், இரண்டுமே ஒரே வசதி படைத்த வண்டிகள் என்றால், ரூ.500 வாங்கும் வண்டிக்காரன் தன்னாலே 300க்கு வந்துவிடுவான். ஒருவேளை 300க்கு போகும் வண்டி பத்து இடங்களில் நின்றும் 500க்கு போகும் வண்டி எங்கும் நிற்காமலும் சென்னை சென்றடையுமானால், சிலர் ரூ.500 கொடுத்துப் போகத் தயங்கமாட்டார்கள். அனைத்து வண்டிகளும் 300 தான் வாங்கவேண்டும் என்று அரசு ஆணையிட்டால், முதலில் வண்டிகளின் சேவை குறையும், பின் பயணர்களுக்கு நல்ல சொகுசு பயணம் கொடுக்கவேண்டும் என்று நினைக்கும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் அந்த வியாபாரத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்; அடுத்து என்ன நடக்கும் என்று நீங்களே யூகிக்கலாம்--மற்ற சொத்தை டிராவல்ஸ் உரிமையாளர்களின் மட்டமான சேவையோடு சில பேருந்த்துகள் மட்டுமே ஓடும். ஓடுவது மிகக்குறைத்த வண்டிகள்தானே என்று இந்த மட்டமான வண்டிக்காரனும் மேசைக்கு அடியில் கொடுத்தால் தான் டிக்கட் கொடுப்பான். கடைசியில் சிரமப்படுவது நுகரும் பொதுமக்கள்தான்.

உயர்கல்வியிலும், நல்ல கல்லூரிகள் தழைத்து பிழையான கல்லூரிகள் களைஎடுக்கப்பட வேண்டுமானால் ஒவ்வொரு கல்லூரியும் அதன் நிர்வாகப் பிரிவில் சேரும் மாணவர்களிடம் எவ்வளவு நன்கொடை பெறவேண்டும் பெறமுடியும் என்பதை மாணவர்களே முடிவு செய்யவேண்டும். சந்தையில் ஒர் கல்லூரியின் (நிர்வாகப் பிரிவு) சீட்டுக்கு விலை நிர்ணயிக்கப் பட்டு விட்டால், கல்லூரி உரிமையாளர்களால் பெரிய அளவில் அதிலிருந்து விலகிவிடமுடியாது.